யாழ் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி..!

யாழில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வடக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே காணொளியினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக யாழ் மாவட்டத்தில் பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அதிருப்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் மத்தியில்; போதைப் பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசத்தினை பொலிஸார் வழங்கியதான சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பெறுமதி சேர் அதிகரிப்பு உட்பட்ட பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு, இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத தொழில் செயற்பாடுகள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பனை தென்னை வள கூட்டுறவுச்சங்களின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான கடன் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல் மற்றும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றால் நாடளாவிய ரீதியில் பாதிப்பை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version