பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் அவசியம்

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை யாழ். மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தினை மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கூறிய ஜனாதிபதி மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வட மாகாண பாதுகாப்பு பிரிவினரின் கீழ் உள்ள பகுதிகளில் காணப்படும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து மதம் தொடர்பிலும் செயற்படுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாண சர்வமதக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது பரிந்துரைகளைக் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் மத நல்லிணக்கத்தைப் பாதுகாத்து புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு மதத் தலைவர்கள் ஆசிகளை வழங்கினர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version