யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு காணி வழங்குவேன்,யாழ்ப்பாணம் விவசாயம் மற்றும் முதலீட்டு வலயமாகஉருவாக்கப்படும் என வழமை போன்று வடக்கு மக்களை ஜனாதிபதி தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளதாகவே தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பொருளாதாரம் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி கூறிய போதிலும் நாட்டின் தொழில்துறை வீழ்ச்சியடைந்து வருவதால் பொருளாதாரம் ஒருபோதும் வளர்ச்சியடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை பாதுகாப்பதற்கு ஏதேனும் திட்டத்தை தயாரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு சிறுபான்மை கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக தெரிவித்த அசோக அபேசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத 25 கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தி இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இலங்கையில் சிறந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதனூடாக எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்,
“பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வெட் வரியை அதிகரித்தமையினால் மக்கள் பெரும் நெருக்கடியில் வீழ்ந்துள்ளனர்.அரசாங்க புள்ளிவிபரங்களின்படி நாட்டில் உள்ள 57 இலட்சம் குடும்பங்களில் அதிகளவான குடும்பங்களின் செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 இலட்சம் அஸ்வெசும விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.7 இலட்சம் ஓய்வூதியம் பெற்ற குடும்பங்களும்,10 இலட்சம் அரச தொழில் புரியும் குடும்பங்களும் உள்ளதால் இக்குடும்பங்களுக்கு இந்த அஸ்வெசும நிவாரணம் கிடைக்காது.
இதன் பிரகாரம் நாட்டில் உள்ள 57 இலட்சம் குடும்பங்களில் சுமார் 2 இலட்சம் பேர் அரசாங்கத்திடம் உதவி கேட்பதில்லை. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் செலவுகள் அதிகரித்து வருமானம் குறைந்துள்ளது.உணவு,கல்வி,
போக்குவரத்து மற்றும் சுகாதார செலவுகள் அதிகரித்துள்ளன.
2023 ஒக்டோபரில் 18 சதவீதமாக இருந்த மின் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்தத் தொகை மிகக் குறைவு.
தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், மின் கட்டணம் 400 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏயுவு அதிகரிப்பால் எரிபொருள் விலை 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.எரிவாயு விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.இதன் மூலம் அத்தியாவசிய உணவு மற்றும் சேவைகளின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
நிகழ் நிலைக் காப்பு சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கிறது.
நிகழ் நிலைக் காப்பு சட்டத்தின் தற்போதுள்ள வரைவை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இச் சட்ட மூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி முற்றிலும் எதிர்க்கிறது.மக்களுக்கு தகவல் வழங்குவதை கட்டுப்படுத்த முடியாது.உண்மையான தகவலை அணுகுவதை தடுக்கும் எந்த சட்ட மூலத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கும்.”