வடமாகாண பொங்கல் விழா கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியில் நேற்று(16.01) நடைபெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பல்லவராயன்கட்டு மாதிரிக் கிராமத்தின் ஸ்ரீ நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டார்.
குறித்த பொங்கல் நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக பல்லவராயன் கட்டில் இருந்து புதிர் எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்வுகளும், கிராமிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் :
பூநகரி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, சுற்றுலாத்துறை குளங்களை அமைத்தல் போன்ற அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. அதேவேளை வடக்கு மாகாணத்திலே அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு ஐந்து ஆண்டுக்குரிய திட்டத்தினை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணித்திருக்கின்றார். அதற்கான வேலை திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன், வட மாகாண கல்வி அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், விவசாய பெருமக்கள், பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.