சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளை எனக்கூறி தற்போதைய அரசாங்கம் VAT உட்பட பல வகை வரிகளை மக்கள் மீது விதித்து, அவர்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொது மக்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், நடுத்தர வர்க்கம், அரச ஊழியர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் அநாதரவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலும் நேற்று (18.01) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பான கலந்துரையாடலுக்காக சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று கூடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.