இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்ற அரசாங்கம் ஆதரவு..!

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்;துள்ளார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிலாபம் மற்றும் குருநாகல் பிரதேசங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை , அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எல்கடுவ உள்ளிட்ட ஏனைய காணிகளையும் இதற்காகப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரை பயன்படுத்தப்படாத மகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் பயிர்ச்செய்கையையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் போட்டிமிக்க ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளையும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளையும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றையும் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆராய்ச்சித் துறைக்காக சுமார் 08 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version