”தமிழக வெற்றி கழகம்” தளபதியின் கட்சி!

நடிகர் தளபதி விஜய் தனது கட்சிக்கு ”தமிழக வெற்றி கழகம்” என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கட்சியின் பெயரை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்க செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது அனைவரும் அறிந்த விடையமே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. எனவே தற்போதைய அரசியல் சூழல், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ‘ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில் ”தமிழக வெற்றி கழகம்” இவை அனைத்தையும் சரி செய்யும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும் எனவும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகள் விரைவில் நடக்கும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

''தமிழக வெற்றி கழகம்'' தளபதியின் கட்சி!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version