சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (16.02) திகதி இடம் பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை விரைவுபடுத்தி மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மேற்கொள்ளும் போது எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பில் படகு வீடுகளை அறிமுகம் செய்தல், படகு சவாரி மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் மிதக்கும் உணவகங்களை அறிமுகம் செய்தல் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எந்திரி என். சிவலிங்கம், கிழக்கு மாகாண சுற்றுலாதுறை பணியகத்தின் தவிசாளர் பி.மதனவாசன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.