இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 434 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 5 போட்டிகளடங்கிய தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியியானது இந்தியாவின் பெரிய வெற்றியாக பதிவாகியுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 131 ஓட்டங்களையும், ரவீந்தர ஜடேஜா 112 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மார்க் வூட் 4 விக்கெட்களையும், ரெஹான் அஹமட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ஓட்டங்களை பெற்றது. இதில் பென் டக்கட் 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். தாயாரின் சுகவீனம் காரணமாக ரவிச்சந்திரன் அஷ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் போட்டியிலிருந்து விலகி சென்று மீண்டும் இரண்டாம் இன்னிங்சிஸ் பந்துவீச்சில் இணைந்து கொண்டார். இந்தியா அணி சார்பாக 500 விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளாராகவும், உலகின் ஒன்பதாவது பந்துவீச்சாளராகவும் தனது பெயரை பதிவு செய்துகொண்டுள்ளார். வேகமாக 500 விக்கெட்ளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார். முதலிடம் முரளிதரனுக்கு சொந்தமானது.
இந்தியா அணி இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 430 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜஷாஷ்வி ஜய்ஷ்வால் ஆட்டமிழக்காமல் 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது இவரின் இரண்டாவது இரட்டை சதமாகும். 7 போட்டிகளில் 3 சதங்களையும், 2 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். சுப்மன் கில் 91 ஓட்டங்களையும், தனது முதற் போட்டியில் விளையாடிய சப்ராஸ் கான் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை பெற்றார். முதல் இன்னிங்சில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
557 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எவரும் குறிப்பிடத்தக்களவு பிரகாசிக்கவில்லை. இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்ற்றினார்கள்.