“பாரத்-லங்கா” வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டம் அங்குரார்ப்பணம்..!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நேற்று (19) நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை கூறினார்.

கட்சி பேதமின்றி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்த எதிர்பார்க்கும் முன்மொழிவுகளை அடுத்த மாதத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பாரத்-லங்கா வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில், 45 தோட்டங்களில், 1300 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டும் வகையில் ஒன்லைன் ஊடாக நினைவுப் பலகை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து கொண்டனர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version