பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தேசிய வள பாதுகாப்பு அமைப்பு (NRPM) தீர்மானித்துள்ளது.
இதன்படி, கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய வள பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்புறுதி தபால் நிலையங்கள், ரயில்வே, வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற திட்டத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த முன்னோடியில்லாத விற்பனையானது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தங்களது உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுவதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.