இவ்வருடம் நீர் கட்டணம் அதிகரிக்கப்படாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
உத்தேச நீர் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது மக்களை ஒடுக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று (26.02) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் நாளாந்த சம்பளத்துடன் மட்டுப்படுத்தப்படாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு என ஒவ்வொரு பகுதியிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ள போதிலும், மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.