யாழ் பரியோவான் கல்லூரி மாணவனான குகதாஸ் மாதுளன் இந்தியா, சென்னைக்கு சென்றுள்ளார். இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியின் பரியோவான் கல்லூரி அணியின் வீரரான 17 வயது குகதாஸ் மாதுளன் இந்தியா அணியின் முன்னாள் தலைவரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மஹேந்திரா சிங் டோனியின் அழைப்பின் பேரில் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையில் கடந்த வாரம் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாகமாதுளன் பந்துவீசியிருந்தார். இவர் 04 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். லசித் மாலிங்க பாணியில் பந்து வீசும் இவர் வீசிய யோக்கர் பந்து ஒன்றில் துடுப்பாட்ட வீரர் போல்ட் முறையில் ஆட்டமிழந்தமை பலரையும் கவர்ந்திருந்தது. இதனை வீடியோ மூலம் டோனி பார்த்திருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இவரை இணைத்து பயிற்சிகளை வழங்கவும், இம்முறை IPL போட்டிகளில் பயிற்சிகளை வழங்க அல்லது வலை பந்துவீச்சாளராக பாவிக்க மாதுளன் அழைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.