தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான மறைந்த விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்(தேமுதிக) சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு பெற்றுள்ளார்.
விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்(அதிமுக) கூட்டணி வேட்பாளராகவும் அறிமுக வேட்பாளராகவும் களம் காண உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று வெளியாகியிருந்த அதிமுக வேட்பாளர் பட்டியலுக்கு அமைய அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் விரும்பம் தெரிவித்திருந்தனர். திருமங்கலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேமுதிக, தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், பாஜக மற்றும் அதிமுக என இரண்டு பெரிய கட்சிகளும் அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக உடன் தேமுதிக கூட்டணி சேர்ந்து உள்ளது.
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு திருவள்ளூர், மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.