இலங்கை அணிக்கு எதிராக சதம் அடித்த வூல்வார்ட் – SLW vs RSAW

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா மகளிர் அணி 79 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 

தென்னாபிரிக்காவின் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அணித் தலைவி வூல்வார்ட் 102 ஓட்டங்களையும்  மரிசான் கேப் 60 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

பந்துவீச்சில் அச்சினி குலசூர்ய 2 விக்கெட்டுகளையும், பிரியதர்ஷினி 1 விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர். 

199 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது 7வது ஓவரின் நடுவே மழைக் குறுக்கிட்டது. 

மழையின் பின்னர் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இலங்கை அணியால் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 

அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி 79 ஓட்டங்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியது. 

இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 38 ஓட்டங்களையும் ஹாசினி பெரேரா 30 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில் டியூமி செக்குகுன் மற்றும் அன்னரி டர்க்சன் தலா 2 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டனர். 

போட்டியின் ஆட்ட நாயகியாக தென்னாபிரிக்கா அணித் தலைவி வூல்வார்ட் தெரிவு செய்யப்பட்டார். 

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் 2வது போட்டி எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version