கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர்த் தாங்கி கோபுரம் உட்பட ஏனைய நீர்த் தாங்கிகள் சுமார் 20 வருடங்களாகச் சுத்தம் செய்யப்படவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் தற்போது பிரதான நீர்த் தாங்கி கோபுரம் உட்பட சுமார் 161 நீர்த் தாங்கிகள் உள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லான ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இத்தகைய நீர்த்தாங்கிகள் சுத்தம் செய்யப்பட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். குறித்த நீர்த்தாங்கிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வருடந்தோறும் நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதும், நீரின் தரத்தை உறுதிப்படுத்துவதற்குக் குறித்த பரிசோதனைகள் மாத்திரம் போதாது எனவும் ருக்ஷான் பெல்லான வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலை, வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்குச் சுகாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய நீரின் பயன்பாட்டினால் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் பாதிக்கப்படுவதற்குச் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் வைத்தியர் ருக்ஷான் பெல்லான சுட்டிக்காட்டியுள்ளார்.