இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவர் ஹர்திக் பாண்டியா மைதானத்திலிருந்த இரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது.
மும்பையில் இன்று(01) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
போட்டியின் நாணய சுழற்சியின் போது மும்பை அணியின் புதிய தலைவர் ஹர்திக் பாண்டியாவிற்கு, இரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததோடு, அணியின் முன்னாள் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகவும் இரசிகர்கள் குரல் எழுப்பியிருந்தனர்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அணி தலைவர் ஹர்திக் பாண்டியா 34 ஓட்டங்களையும், திலக் வர்மா 32 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் போல்ட் மற்றும் சலால் தலா 3 விக்கெட்டுகளையும், நன்றே பர்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
126 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் இந்த போட்டியிலும் அரை சதம் கடந்த ரியன் பராக் ஆட்டமிழக்கமால் 54 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றார்.
மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளையும், கவேனா மபகா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜஸ்தான் அணியின் டிரென்ட் போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரையில் பங்குபற்றிய 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேரியது.
தொடரில் ஹட்ரிக் தோல்விகளை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்தும் புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
இதேவேளை, இந்தியன் பிரீமியர் தொடரின் நாளைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.