தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுடன் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தி இன்று அழைப்பு விடுத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இன்று(02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சஜித் பிரேமதாசவிற்கு இந்த அழைப்பினை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் சவால் விடுத்திருந்த நிலையில், சுனில் ஹந்துநெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பகிரங்கமாக விவாதிப்பதன் ஊடாக மக்கள் கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என சுனில் ஹந்துநெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் விவாதத்திற்கு அனுரகுமார திஸாநாயக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவாதத்திற்கான அழைப்பினை சஜித் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அதனை எழுத்து மூலம் அறிவிக்குமாறும் சுனில் ஹந்துநெத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
விவாதத்திற்கான திகதி, நேரம் மற்றும் எந்த தொலைக்காட்சி அலைவரிசையில் விவாதம் நடைபெறும் என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.