கடந்த ஆண்டில் மாத்திரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேக நபர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படும் சந்தேகநபர்களை ஆயுதங்களை மீட்க இரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குறித்த சந்தேக நபர்கள், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பொறுப்பாகும் என நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுள் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு, 2023ம் ஆண்டில் பொலிஸாருக்கு எதிராக 9,417 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றுள் 44 முறைப்பாடுகள் யுக்திய நடவடிக்கையுடன் தொடர்புடையதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.