மைத்திரியிடம் உண்மைகளை கோரவுள்ள பாராளுமன்றம் 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அனைத்து விடயங்களையும் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விவாதிப்பதற்கு நேற்று(05) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் திகதி தொடக்கம் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, குறித்த தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற விவாதத்தினை கோரியிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை தமக்குத் தெரியும் என அண்மையில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், மைத்திரிபாலவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் அதனை மறுத்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவினால் குற்றப்புலனாய்வு பிரிவில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தில், அவர் அண்டை நாடு ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், மீண்டும் பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version