தடுப்பு முகாமில் இருந்து 8 இலங்கையர்கள் மீட்பு
மியன்மார் தடுப்பு முகாமில் இருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைப்பு
மியன்மாரில் பயங்கரவாத தடுப்பு முகாமிலிருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த மாதம் முதலாம் திகதி மீட்கப்பட்ட நிலையில் விரைவில் நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜானக பண்டார தெரிவித்திருந்தார்.
இதன்படி குறித்த 08 பேரும் இன்று ஒப்படைக்கப்பட்டதுடன் தற்போது மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஏனைய 48 இலங்கையர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மியன்மார் – தாய்லாந்து எல்லையில் அரசாங்கத்துடன் தொடர்புபடாத ஆயுதக்குழுவொன்றின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த 56 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டு கணினி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கணினித் துறையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி இவர்கள் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.