வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பில் உள்ள தமிழர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை எனவும், ஆகவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும் தமிழ் பொது வேட்பாளர் குறித்தும் இதுவரை எவ்வித கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னாரில் இன்று(15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்கின்ற போதும், தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம் எனவும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் போது வேட்பாளர்கள் தொடர்பில் கட்சி தெளிவான தீர்மானத்தை மேற்கொள்ளும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.