அதிகூடிய வெற்றி இலக்கை கடந்து சாதனை படைத்த இலங்கை மகளிர் 

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரைச் சமப்படுத்தியது.

இலங்கை மகளிர் அணித் தலைவி சாமரி அத்தபத்துவின் 195 ஓட்டங்களின் உதவியுடன், சர்வதேச ஒருநாள் போட்டியில் 302 ஓட்டங்கள் எனும் அதிகூடிய வெற்றி இலக்கை கடந்து இலங்கை மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் நேற்று(17) பங்குபற்றியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 301 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அணித் தலைவி லோரா 184 ஓட்டங்களையும், மரிசான் கேப் 36 ஓட்டங்களையும், நாடின் 35 ஓட்டங்களையும் மற்றும் லாரா குடால் 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் கவிஷா 2 விக்கெட்டுகளையும், சாமரி அத்தபத்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக்கொண்டனர்.

302 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இலங்கை அணி சார்பில் சாமரி அத்தபத்து 139 பந்துகளில் 195 ஓட்டங்களையும், நிலக்‌ஷிக்கா 50 ஓட்டங்களையும் மற்றும் விஷ்மி குணரத்ன 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

சாமரி அத்தபத்து பெற்றுக்கொண்ட 195 ஓட்டங்கள், மகளிர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நபர் ஒருவர் பெற்றுக் கொண்ட மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில் அயபோங்கா 2 விக்கெட்டுகளையும், டெல்மி மற்றும் நாடின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக்கொண்டனர்.

இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதன் காரணமாகத் தொடர் 1-1 எனச் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்ததுடன், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்றிருந்தது.

போட்டியின் ஆட்ட நாயகியாக இலங்கை அணித் தலைவி சாமரி அத்தபத்துவும், தொடரின் சிறப்பாட்டக்காரராக தென்னாப்பிரிக்க அணித் தலைவி லோராவும் தெரிவு செய்யப்பட்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version