ஈரான் ஜனாதிபதி நாளை(24.04) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிற்கு அமைய உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டிற்கு வருகைத்தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உமா ஓயா திட்டம், ஈரானிய நிறுவனங்களின் பாரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுவதுடன், ஈரானிய ஒப்பந்ததாரர்களால் வெளிநாடு ஒன்றில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாகும்.
ஈரான் – இஸ்ரேல் மோதலின் காரணமாக ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்தி வைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், தற்போது ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று(22.04) பாகிஸ்தானை சென்றுள்ளார்.
இந்த விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.