கடித எழுத வேண்டிய தேவையில்லை விவாதங்களுக்கு தயார் – சஜித்

கடித எழுத வேண்டிய தேவையில்லை. மே மாதம் இரண்டு விவாதங்களுக்கும் நாங்கள் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நளின் பண்டார அவர்கள் பொருளாதார துறையில் விவாதத்திற்கு வருமாறு சகோதரர்களுக்கு சவால் விடுத்த போது, பொருளாதார நிபுணர்களின் விவாதத்தில் இருந்து தப்பிய சகோதரர்கள் மீண்டும் தலைவர்களுக்கு இடையில் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தனர். மே மாதத்தில் இந்த இரண்டு விவாதங்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 162 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ஒகண்தயாய மகா வித்தியாலயத்திற்கு
வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயாராக இருப்பதாகவும், இதிலிருந்து தப்பி ஓடாமல், இந்த இரண்டு சவால்களையும் ஏற்றுக்கொள்ளுமாறும், கோழைகளாக தப்பித்து ஓடாது, விவாதத்திற்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலான விவாதத்திற்கு முடியாது என கூறுவது அவர்களின் பொருளாதார வல்லுனர்களால் நாட்டுக்கான சரியான பொருளாதார பார்வையை முன்வைக்க முடியாமையினாலா என்ற பிரச்சினை எழுகிறது. எனவே, கடிதம் அனுப்பாமல் மே மாதம் இரு விவாதங்களுக்கும் வாருங்கள். அதே போல் விவாதங்கள் நடத்துவது போலவே, வெறும் வாய்வீராப்பு காட்டாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள். பிரயோக ரீதியான தலைவர்களே நாட்டிற்குத் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீராப்பு பேச்சுக்களால், பொய்களால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுக்கும், மக்கள் பணிக்கும் தயாராக இருப்பதால்,அஞ்ஞாது விவாதத்திற்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

🟩மொழிப் பிரச்சினையால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் என்று சொல்பவர்கள் தங்கள் வாக்குப்பெட்டியை நிரப்புகிறார்களே தவிர கல்வியை மேம்படுத்தவில்லை. இதன் காரணமாக, ஓரு மொழிக்குள் சிக்குண்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் இளைஞர் யுவதிகள் வேலையின்றி வேலையின்மை வரிசையில் நிற்கின்றனர். இம்முறைமை மாற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முயற்சியாண்மைகளை உருவாக்கும் அறிவு பாடசாலை கல்வியிலும் வழங்கப்பட வேண்டும். பாடசாலை பருவத்தில் இருந்தே முயற்சியாண்மை கல்வியும் புகட்டப்பட்டு ஒரு மில்லியன் தொழில்முனைவோரை உருவாக்க நாம் எமது ஆட்சியில் நடவடிக்கை எடுப்போம். இதற்குத் தேவையான அபிவிருத்திகள், வளங்கள் மற்றும் நிதி வசதிகள் சலுகை விலையில் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எங்கள் இலக்கு டிஜிட்டல் ஸ்ரீலங்கா என்றால் தரம் 1-13 வரை தகவல் தொழிநுட்பம் பாடமாக கற்பிக்கப்பட வேண்டும். முன்பள்ளியிலும் ஓரளவுக்கு இதன் பரிச்சயம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டில் வாரத்தில் 7 நாட்களும் 365 நாட்களும் வாய்மொழிக் கல்வியாகவே புகட்டப்படுகிறது. இதனால் பிள்ளைகளுக்கும் நாட்டிற்கும் எதிர்காலம் இல்லை என்பதனால் கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version