இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தொடர் தோல்விகளின் காரணமாக தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய(28.04) போட்டியில் 78 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியதன் ஊடாக சென்னை அணி இவ்வாறு தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முன்னேறியது.
இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் 98 ஓட்டங்களையும், பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று(28.04) நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அபார வெற்றியீட்டியது.
குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 201 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை 16 ஓவர்களில் கடந்தது.
பெங்களூரு அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் சதம் கடந்திருந்ததுடன், விராட் கோலி 44 பந்துகளில் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றயீட்டியிருந்த போதும், ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்தும் 10ம் இடத்தில் உள்ளது.
மேலும், தொடரில் இதுவரையில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர்களின் பட்டியலில் விராட் கோலி 500 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 447 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்திலும், சாய் சுதர்சன்(குஜராத்) 418 ஓட்டங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்களின் பட்டியலில் பும்ரா, முஸ்தபிசுர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 14 விக்கெட்டுகளுடன் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளனர்.
இதேவேளை, தொடரின் முக்கிய போட்டியொன்று இன்று(29.04) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.