பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் டிரான் அலஸ், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து விடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், சட்டவாட்சியை உதாசீனப்படுத்தும் வகையிலும் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டுகுருந்த விசேட அதிரடி படையினர் பயிற்சி முகாமில் இடம்பெற்ற, பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வௌியிட்ட கருத்துகள் தொடர்பில், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கலந்துரையாடியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, டிரான் அலஸை உடனடியாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் முன்வைத்த கூற்றுக்கள் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை கோட்பாடுகள் மற்றும் குற்றவியல் நீதி தீர்ப்பு கட்டமைப்பை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.