மன்னாரில் 10 கோடிக்கு ரூபாவுக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம் 

மன்னாரில் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் தலை மன்னாரைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்குச் சொந்தமான கடைத்தொகுதியுடன் கூடிய இரண்டு வீடுகள் மற்றும் ஒரு சொகுசு ரக வாகனம் என  சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக குற்றப்புலனாய்வு சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக கொழும்பிலிருந்து மன்னாருக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், 42 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அவரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விசாரணையிலின் போது, குறித்த நபர் போதை பொருட்களை விற்பனை செய்யும் ஒரு முக்கியஸ்தர் என கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இரண்டு  இயந்திரப் படகுகளை வைத்துத் தொழில் செய்து வந்ததுடன், அரச வீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

2019ம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பிட்ட காலப்பகுதியில் குறித்த நபர் சுமார் பத்து கோடிக்கு அதிகமான சொத்துக்களை சேகரித்து வைத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சொத்துக்கள் தொடர்பாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சொத்துக்களை சேகரித்த விதம் தொடர்பில் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. 

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபதி சமந்த விஜேசேகர மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடிப்படையினரின் உதவியுடன், சந்தேக நபர் இன்று (02.05) கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

போதை பொருட்களுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்களை  முடக்கும் செயற்பாடு வட மாகாணத்திலே இதுவே முதல் தடவை முன்னெடுக்கப்பட்டது எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Social Share

Leave a Reply