தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கோயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பிரான்சிய தூதுவருடன், தூதரக துணை தலைமை அதிகாரி மாரி நொயெல்லா தூரிசும் உடன் இருந்ததாக மனோ கணேசனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, இலங்கைக்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகள் இலங்கையின் தமிழ் மக்களுக்கும், பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைப்பதை உறுதி படுத்துமாறு மனோ கணேசன் பிரான்சிய தூதுவரை கேட்டு கொண்டார்.
இந்த சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில், மனோ கணேசன் பின்வருமாறு கூறியுள்ளார்,
“பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கோயிஸ் இல்லத்தில் பிரான்சிய விருந்தோம்பல் ஆசாரத்துடன் கூடிய பயனுள்ள சந்திப்பு நிகழ்ந்தது. தெற்கு உலக நாடுகள் தொடர்பில் பங்களிப்புகளை வழங்க பிரான்ஸ் இன்று உறுதியாக இருப்பது என்னை கவருகிறது. ஜனாதிபதிகள் மெக்ரோன், விக்கிரமசிங்க ஆகியோர் மத்தியிலான பேச்சுவார்த்தைகளின் பின் இலங்கைக்கு சமுத்திர துறை தொடர்பில் உதவ பிரான்ஸ் ஆர்வம் கொண்டு உள்ளதாக தூதுவர் மற்றும் தூதரக துணை தலைமை அதிகாரி ஆகியோர் என்னிடம் கூறினர். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகள் இலங்கையில் தமிழ் மக்களுக்கும், பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைப்பதை உறுதி படுத்துமாறு நான் கோரினேன். நமது மக்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்களை முன்மொழிந்து முன்னெடுப்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சுகள் நடத்துவது பற்றியும் கலந்துரையாடினோம்.”