கிழக்கு மாகாணத்துடன் இந்தியா கொண்டிருக்கும் விசேட உறவு

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை 2024 மே மாதம் முதலாம் திகதி முதல் நான்காம் திகதி வரை மேற்கொண்டிருந்தார். 

இவ் விஜயத்தின்போது ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்திருந்த உயர் ஸ்தானிகர், இம் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல் இந்திய அரசாங்கத்தால் இம்மாகாணத்தை சேர்ந்த மக்களுக்காக அமுல்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டிருந்த அவர் வரலாற்று, கலாசார மற்றும் வர்த்தக ரீதியான முக்கியத்துவமிக்க பகுதிகளுக்கும் சென்றிருந்தபர.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் அவர் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் பங்கேற்ற நிகழ்வுகளில், இந்திய- இலங்கை இருதரப்பு பங்குடைமையில் கிழக்கு மாகாணம் விசேட முக்கியத்துவத்தை பெறுவதாக உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியிருந்தார். 

திருகோணமலையின் பரந்தளவான அபிவிருத்திக்கு ஒத்துழைத்து செயற்படுவதற்காக இரு அரசாங்கங்களுக்கிடையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் கலந்துரையாடல்கள், மாகாணம் முழுவதிலும் பல்வேறு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் 33 வெவ்வேறு திட்டங்களை உள்ளடக்கிய பல்துறைசார் நன்கொடை உதவி திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். 

கிழக்கு மாகாணத்திற்கு கணிசமான நன்மைகளை தரும் வகையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு இணைப்பு மற்றும் எரிசக்தி திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திர சிகிச்சை பிரிவின் முன்னேற்றங்களையும் உயர்ஸ்தானிகர் மீளாய்வு செய்திருந்தார். இந்த திட்டம் வெகுவிரைவில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அத்துடன் உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்காகவும் வீடற்ற குடும்பங்களுக்காகவும் இந்திய அரசாங்கத்தால் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் நிர்மாணிக்கப்பட்டுவரும் 600 வீடுகள் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அமைக்கப்படும் மாதிரி கிராம வீட்டு திட்டங்களையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டிருந்தார். 

அதேபோல தம்புள்ளையில் அமைக்கப்பட்டுவரும் 500 மெட்ரிக்தொன் வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சிய சாலைக்கும் விஜயம் செய்திருந்த உயர் ஸ்தானிகர், இத்திட்டத்தினை துரிதமாக நிறைவேற்றுவதற்கு தொடர்புடைய சகல தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென அத்தரப்பினரை ஊக்குவித்திருந்தார்.

அத்துடன், நாட்டில் முதற் தடவையாக அமைக்கப்பட்டு வரும் இவ்வாறான களஞ்சியசாலையானது பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளின் அறுவடைக்கு பின்னரான இழப்பினை குறைப்பதற்கு வழிவகுக்கும். அதேபோல சம்பூர் சூரியக் கல தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் வெகு விரைவில் ஆரம்பமாகும் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். 

மேலும், திருகோணமலையில் உள்ள லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (LIOC) பல்வேறு வளாகங்களுக்கும் உயர்ஸ்தானிகர் விஜயம் மேற்கொண்டிருந்தார். 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்டிருந்த எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தினை தணிப்பதற்கு இந்நிறுவனத்தின் ஈடிணையற்ற பங்களிப்பினை இந்தச் சந்தர்ப்பத்தில் உயர்ஸ்தானிகர் நினைவு கூர்ந்திருந்தார். 

தொடர்ந்து LIOC நிறுவனத்தின் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் திருகோணமலையில் உயர்ஸ்தானிகரால் திறந்துவைக்கப்பட்டது. மற்றொரு நிகழ்வாக உயர்ஸ்தானிகர் அவர்கள் அம்பாறையில் உள்ள ஒலுவில் துறைமுகத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இத் துறைமுகத்தில் காணப்படும் வண்டற்படிவு காரணமாக உள்ளூர் சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படையின் தளத்திற்கும் உயர்ஸ்தானிகர் சென்றிருந்தார். இலங்கை விமானப் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை ஆயுதப் படையினருக்கு டோனியர் விமானம் இயக்கும் பயிற்சிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படையில் இருந்து வருகை தந்திருக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோருடன் அவர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறனை விருத்தி செய்வதில் குறித்த விமானம் மிகவும் முக்கியமான பங்கினை கொண்டுள்ளது. 

காத்தான்குடியில் உள்ள புனித முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பதுறியா ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றிலும் உயர்ஸ்தானிகர் வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க சேருவில் மங்கள ரஜமகா விகாரையில் அவர் புத்தபெருமானை வழிபட்டிருந்தார். 

அத்துடன் திருகோணமலையில் உள்ள புராதன திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இந்திய இலங்கை மக்களின் பொதுவான செழுமை மற்றும் சமாதானத்துக்காகவும் அவர் பிரார்த்தித்திருந்தார், இவிஜயத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கு உயர்ஸ்தானிகர் அஞ்சலி செலுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கான புதிய நிதி உதவி திட்டம் ஒன்றும் உயர்ஸ்தானிகரால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான ஒரு திட்டம் 2023 டிசம்பர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டமை இச் சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கதாகும். 

அதேபோல இம்மாகாணத்தின் இருவேறு பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உயர்ஸ்தானிகர் உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்ததுடன் இதற்கு மேலதிகமாக LIOC நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இருவேறு கூட்டு சமூக பொறுப்பு திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான இணைப்பு திட்டங்களில் கிழக்கு மாகாணத்திற்கு அதிக முக்கியத்துவம் காணப்படும் அதேவேளை இவ்விடயத்தில் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார். 

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளின் மையப் பகுதியை மீள வலியுறுத்திய உயர் ஸ்தானிகர், யாழ்ப்பாணத்திற்கும் நாகபட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவைகள் எதிர்வரும் 2024 மே 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version