இறுதிப் போட்டியில் அபார வெற்றி, சமரி அத்தப்பத்து சதம்

மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது. 

2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இறுதியாக நுழையும் இரு அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சுற்று கடந்த மாதம் 25ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகியது. இம்முறை தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை மகளிர் அணி உட்பட 10 அணிகள் பங்குபற்றியிருந்தன.

தகுதிகாண் போட்டிகளில் முதல் சுற்றில் பங்குபற்றிய 4 போட்டிகளிலும் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இலங்கை மகளிர் அணி 15 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதன் ஊடாக 2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கும், தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. 

அயர்லாந்து அணிக்கு எதிரான மற்றைய அரையிறுதி போட்டியில் வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து மகளிர் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் 8வது போட்டியில் ஸ்கொட்லாந்து மகளிர் அணியை, இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தினால் முன்னதாகவே வெற்றியீட்டியிருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் இறுதிப் போட்டியில் களமிறங்கியது. 

இறுதிப் போட்டி 

அபுதாபியில் நேற்று(07.05) நடைபெற்ற மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஸ்கொட்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி சமரி அத்தப்பத்து 102 ஓட்டங்களையும், நிலக்‌ஷிகா சில்வா 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

170 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் பிரியனாஸ் சட்டர்ஜி 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் உதேஷிகா பிரபோதினி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டி, மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் வெற்றியாளர் பட்டத்தை தன்வசப் படுத்திக் கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகியாக இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்து தெரிவு செய்யப்பட்டார். 

இறுதிப் போட்டியில் அபார வெற்றி, சமரி அத்தப்பத்து சதம்

மகளிர் T20 உலகக்கிண்ணம்

மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள், பங்களாதேஷில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்டன. 

2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. குறித்த 10 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குழு Aயில் 6 முறை சம்பியன்ஷிப் பட்டம் வென்ற அவுஸ்ரேலியா அணியுடன், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும், குழு Bயில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்றுக்கொண்ட ஸ்கொட்லாந்து அணியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

குழு  Aயில் உள்ள அணிகள் பங்குபற்றும் போட்டிகள் பங்களாதேஷின் டாக்கா மைதானத்திலும், B குழுவில் உள்ள அணிகள் பங்குபற்றும் போட்டிகள் பங்களாதேஷின் சிலேட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகும் மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடையவுள்ளது. 

 உலக கிண்ண தொடரில் இலங்கை அணி பங்குபற்றும் முதலாவது போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி நடப்பு சாம்பியன்களான அவுஸ்ரேலியா அணியை எதிர்க்கொள்ளவுள்ளது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version