யுக்திய நடவடிக்கையினூடாக பாடசாலை மாணவர்கள் உட்படக் குற்றம் புரியாதவர்களும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது நியாயமற்ற முறையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படுவதாக ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையினூடாக குருநாகல் மாவட்டத்தில் வீதியோரங்களில் இருக்கும் இளைஞர்கள், பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குற்றவியல் சட்டத்தின் குற்றஞ்சாட்டப்படுவதால் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் பாராளுமன்றத்தில் இன்று(10.05) தெரிவித்தார்.
நாரம்மல பகுதியில் நேற்று(09.05) இளைஞர்கள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுள் ஒரு பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சமன்பிரிய ஹேரத் சுட்டிக்காட்டினார்.
நாரம்மல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியாயமற்ற முறையில் செயற்படுவதாகவும், இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் போதைக்கு அடிமையாகியே மீண்டும் சமூகத்திற்கு வருவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
யுக்திய நடவடிக்கையை சில பொலிஸ் அதிகாரிகள் முறையற்ற விதத்தில் கையாளுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் வலியுறுத்தினார்.
இதேவேளை, இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த பாராளுமன்றத்தில் இன்று(10.05) தெரிவித்தார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி, சட்டத்தைக் கையில் எடுப்பது தவறான செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சில அதிகாரிகளின் இத்தகைய செயற்பாடுகளால் யுக்திய நடவடிக்கை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுதுவதாகவும் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்தார்.