O/L பரீட்சையின் போது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 15ம் திகதி புதன்கிழமை நிறைவடைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பரீட்சை நிலையத்தில் தமிழ் மொழியில் பரீட்சைக்குத் தோற்றிய 14 மாணவர்களுக்கு புவியியல் பாடத்திற்கான பரீட்சையின் போது 50 புள்ளிகளுக்குரிய முதலாம் பகுதி வினாத்தாள் மற்றும் வரைபடங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள், இந்த விடயம் தொடர்பில் பரீட்சை நிலையத்திலிருந்த உரிய அதிகாரிகளிடம் தெரிவித்திருந்த போதும், பரீட்சை நிறைவடையும் வரை அவர்களுக்கான முதலாம் பகுதி வினாத்தாள் மற்றும் வரைபடங்கள் வழங்கப்படவில்லை மாணவர்கள் சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மினுவாங்கொடை அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உள்ள பரீட்சை நிலைய அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் பேச்சாளர் உறுதியளித்தார்.

இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது விசேட தேவையுடைய இரு மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய விசேட சேவைகளை அனுமதிக்கத் தவறியமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வத்தளை புனித அந்தோனியார் பாடசாலையில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய விசேட தேவையுடைய மாணவர் ஒருவருக்கு விடை எழுதுவதற்கு மற்றுமொரு நபரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு பரீட்சை திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த போதும், குறித்த மாணவருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆங்கில மொழியின் இரண்டாம் பகுதி வினாத்தாளுக்கு விடை எழுதுவதற்கு வழங்கப்பட்டிருந்த விசேட அனுமதி இவ்வாறு மறுக்கப்பட்டிருந்தமை தொடர்பில், குறித்த மாணவரிக் பெற்றோரினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மெதடிஸ்த கல்லூரியின் விசேட தேவையுடைய மாணவர் ஒருவர் நான்கு பாடங்களுக்கான விடைகளை எழுதுவதற்கு மற்றுமொரு தனிநபரின் சேவையை பெற்றுக்கொள்ளவதற்கு பரீட்சை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிகாரிகள் பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும், குறித்த மாணவருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலும் மாணவரின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்தும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதை கண்டித்துள்ளார்.

மேலும், பரீட்சை நிலையங்களில் தமிழ் மொழியில் உரையாற்றக் கூடிய அதிகாரிகள் இன்மையினால், தமிழ் மாணவர்களிள் தேவைகளை ஏனைய மொழிகளில் பேசக்கூடிய அதிகாரிகளால் புரிந்து கொள்ள இயலவில்லை எனவும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version