உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ்க் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று எலோன் மஸ்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விற்காக இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு Elon Muskகை சந்தித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
தனியார் விண்வெளிப் பயண நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணைய வசதிகளை வழங்கும் Starlink எனும் செயற்கைக்கோள் வலையமைப்பு இந்தோனேசியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Starlink இணைய சேவை செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதுடன், இலங்கையின் கிராமங்களில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான இணைய சேவை உதவியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எலோன் மஸ்கின் இலங்கை விஜயத்திற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.