கோட்டவின் பதவி காலத்துக்கு மட்டுமே ரணிலோடு ஒப்பந்தம் – சாகர

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் பதவி காலத்தை ஈடு செய்யும் காலத்துக்கு மட்டுமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும், அதன் பின்னர் அவ்வாறு எந்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று(20.05) நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பொது தேர்தலை நடாத்துமாறே தமது கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன் வைத்ததாகவும், அது தமது கட்சியின் பரிந்துரை மட்டுமே எனவும் ஜனாதிபதிக்கே எந்த தேர்தலை நடாத்துவது என்பது தொடர்பில் முடுவெடுக்கும் உரிமை உள்ளதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார். சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தலே முன்னுக்கு வைக்க வேண்டும். ஆனால் 2 1/2 வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதெனவும் அதன்படியே கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணிலிடம் பரிந்துரை செய்தார் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எந்த தேர்தலை முதல் வைத்தாலும் சந்திக்க பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலோ, பொது தேர்தலோ, உள்ளூராட்சி தேர்தலோ, மாகாணசபை தேர்தலோ எது வந்தாலும் தயார் என கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய பலர் தமது கட்சியில் காணப்படுவதாகவும், உரிய நேரத்தில் வெற்றி வேட்பாளரை தாம் அறிவிப்போம் எனவும் மேலும் அவர் தமது கட்சி நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply