லங்கா பிரீமியர் லீக் தொடரில், தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் தலைவருமான பங்களாதேஷை சேர்ந்த தமீம் ரஹ்மான் போட்டி நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினால் அணியின் உரிமை நிறுத்த/ திரும்பப் பெறப்பட்டுள்ள போதும் 2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை அணியின் உரிமம் புதிய உரிமையாளருக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் LPL தொடரின் உரிமம் பெற்றுள்ள IPG குழுமம் தெரிவித்துள்ளது. இதனுடாக தம்புள்ளை அணி எவ்வித தடைகளுமின்றி புதிய உரிமையாளரின் கீழ் தொடரில் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும், 2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் முன்னர் அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணையின் படி 5 அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
LPL தொடரின் உரிய தரநிலைகளை பேணுவதற்கும், அனைத்து வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒருமைப்பாடு மற்றும் கிரிக்கெட்டின் நியாயமான தன்மை, தொடர் முமுவதும் கடைபிடிக்கப்படும் என LPL தொடரின் உரிமம் பெற்றுள்ள IPG குழுமம் உறுதியளித்துள்ளது. இரசிகர்கள் எதிர்பார்க்கும் உயர் தர கிரிக்கெட் அனுபவத்தை வழங்கும் வகையில், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று IPG குழுமத்தின் தலைவர் அனில் மோகனும் உறுதியளித்துள்ளார்.
2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் கண்டி, தம்புள்ளை மற்றும் கொழும்பு ஆகிய மைதானங்களில் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளது.