பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நாளாந்த சம்பளமாக 1,350 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானியின் படி, நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபா வழங்கப்படவுள்ளதுடன், நாளாந்த மொத்த கொடுப்பனவாக 1,700 ரூபா வழங்கப்படவுள்ளது.
மேலதிக கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமெனவும் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழிலாளர்களின் சம்பளத்தை செலுத்தத் தவறும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான காணி குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அத்தகைய பெருந்தோட்டக் கம்பனிகளுடனான காணி குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்யக் கூடிய வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.