2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி பெற்றுக்கொண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது Qualifier போட்டியில் 36 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதன் ஊடாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.
முதலாவது Qualifier போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், Eliminator போட்டியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இரண்டாவது Qualifier போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. சென்னையில் இன்று(24.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஹைதராபாத் அணி சார்பில் ஹென்ரிச் கிளாசென் 50 ஓட்டங்களையும், ராகுல் திருப்பதி 37 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ராஜஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் போல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
176 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 30 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணி சார்பில் துருவ் ஜூரேல் 56 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஹைதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் சபாஷ் அஹமட் 3 விக்கெட்டுக்களையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, இரண்டாவது Qualifier போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் சபாஷ் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் இறுதிப் போட்டியில், முதலாவது Qualifier போட்டியில் வெற்றியீட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இன்றைய போட்டியில் வெற்றியீட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. சென்னையில் எதிர்வரும் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.