ஐ.பி.எல் இறுதிப்போட்டி இன்று 

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பமாகி சுமார் இரண்டு மாத காலமாக நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று(26.05) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.    

ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணிக்கு எதிரான முதலாவது Qualifier போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. பட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி முதலாவது Qualifier போட்டியில் தோல்வியடைந்திருந்த போதும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது Qualifier போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. 

2024ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் இறுதிப் போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சென்னையில் நேற்று(25.05) பெய்த மழையின் காரணமாக கொல்கத்தா அணியின் பயிற்சிகளும் கைவிடப்பட்டிருந்தது. இருப்பினும் வானிலை அறிக்கைகளின் படி இன்றைய இறுதிப் போட்டியின் போது மழை குறுக்கிடாது என தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்த போதும், இரண்டாவது Qualifier போட்டியில் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் வியாஸ்காந்த் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது. 

கெளதம் கம்பீரின் வழிகாட்டுதலில் ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையில் 3வது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றுமா அல்லது உலக கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் ஆகியவற்றை கைப்பற்றிய பட் கம்மின்ஸின் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐ.பி.எல் கிண்ணத்தையும் கைப்பற்றுமா எனும் எதிர்பார்ப்பு மத்தியில்  2024ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் இறுதிப்போட்டி இன்னும் சில மணித்தியாலங்களில் ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version