2024ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிண்ணத்தைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதன் ஊடாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாகவும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரை வென்றது. 114 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றியலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது.
சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று(26.05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹைதராபாத் அணித் தலைவர் பட் கம்மின்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். ஹைதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முதல் இரு ஓவர்களில் ஆட்டமிழக்க, கடந்த 2 போட்டிகளிலும் அணியின் துடுப்பாட்டத்திற்கு பெரும் வலு சேர்த்த ராகுல் திருப்பதியும் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
மத்தியத் தர துடுப்பாட்ட வீரர்களான எய்டன் மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, கிளாசன் ஆகியோர் முறையே 20, 13, 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். ஏனைய வீரர்களும் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அணித் தலைவர் பட் கம்மின்ஸின் 24 ஓட்டங்களுடன், ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் ஆன்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர். தொடரின் ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி, பல முறை 250 ஓட்டங்களைக் கடந்த ஹைதராபாத் அணி இறுதிப் போட்டியில் 113 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை இரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
114 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா அணி இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டினை இழந்தது. பின்னர் களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணியை வெற்றியிலக்கை நோக்கிக் கொண்டு சென்றார். வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
மறுபுறம் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ரஹமதுல்லா குர்பாஸ் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது. ஹைதராபாத் அணி சார்பில் அணித் தலைவர் பட் கம்மின்ஸ் மாத்திரம் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். இதன்படி, 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி மூன்றாவது முறையாகவும் ஐ.பி.எல் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இம்முறை தொடரின் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3 போட்டிகளில் மாத்திரம் தோல்வியடைந்து 20 புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் இடத்தை கைப்பற்றிய சிரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் இறுதிப் போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரின் வெற்றியாளர்களாக மகுடம் சூடியுள்ளனர்.