2024ம் ஆண்டிற்கான 23 வயதிற்குட்பட்ட மகளிர் தேசிய சூப்பர் லீக் தொடரை தம்புள்ளை மகளிர் அணி கைப்பற்றியது. கொழும்பு மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டிய தம்புள்ளை மகளிர் அணி தொடரை கைப்பற்றிக் கொண்டது.
காலி சர்வதேச மைதானத்தில் நேற்று(26.05) நடைபெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கொழும்பு அணி சார்பில் ஷிகாரி டி சில்வா 25 ஓட்டங்களையும், நிகேஷா விஜேசேகர 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தம்புள்ளை அணி சார்பில் பந்துவீச்சில் விதுஷிகா பெரேரா 3 விக்கெட்டுகளையும், ஹரிணி பெரேரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
99 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தம்புள்ளை அணி சார்பில் விமோக்ஷா பாலசூரிய 27 ஓட்டங்களையும், லிம்மி திலகரத்ன 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். கொழும்பு அணி சார்பில் பந்துவீச்சில் ஹஷினி லியனகே 3 விக்கெட்டுக்களையும், தருஷி தத்சரணி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் கொழும்பு மகளிர் அணியில் மன்னாரை சேர்ந்த பந்து வீச்சாளரான சஜிந்தினி சதீஸ்குமார் எனும் வீராங்கனையும் இடம்பெற்றிருந்தார். போட்டியில் 2 ஓவர்கள் பந்துவீசிய சஜிந்தினி, விக்கெட்டுகளை பெறமால் 9 ஓட்டங்களை வழங்கியிருந்தார்.
இதன்படி, தம்புள்ளை மகளிர் அணி 2024ம் ஆண்டிற்கான 23 வயதிற்குட்பட்ட மகளிர் தேசிய சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியது.