நாட்டில் போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வவுனியாவை சேர்ந்த ரொஷான் என்பவர் நேற்று(27.05) நடைபயணம் ஒன்றை வவுனியா மணிக்கூட்டு சந்தியில் ஆரம்பித்தார். இரண்டாம் நாளாக இன்று காலை மடுச்சந்தியில் ஆரம்பித்து மன்னாரில் நிறைவடைந்துள்ளது. நாளை மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் செல்லும் ரொஷானின் நடைபயணம், 30 ஆம் திகதி மாங்குளத்தில் நிறைவடையவுள்ளது.
வட மாகாணத்து ஐந்து மாவட்டங்கள் ஊடாகவும் இந்த நடைப்பயணத்தை ரொஷான் மேற்கொள்ளவுள்ளார். 31 ஆம் திகதி ஆனையிறவில் நிறைவடையும் பயணம் மறுநாள் முதலாம் திகதி சாவகச்சேரி சென்று இரண்டாம் திகதி யாழ் நகரினூடாக நடைபயணம் சென்று மூன்றாம் திகதி பரந்தன் சந்தி ஊடாக புதுக்குடியிருப்பை வந்தடையும். அதன் பின்னர் நான்காம் திகதி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதிகளினூடாக பயணித்து ஐந்தாம் திகதி ஒட்டுசுட்டான் ஊடாக ஓமந்தையை வந்தடைந்து ஆறாம் திகதி ஓமந்தையிலிருந்து வவுனியா வந்தடையவுள்ளது.
“போதைவஸ்து பாவனையை நிறுத்தி எதிர்கால இளம் சந்ததியினருக்கு போதையற்ற உலகை வழங்குவோம்” எனும் தொனிப்பொருளில் ரொஷான் இந்த நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சிறுவர்கள் முன்னதாக போதை மது போன்ற பாவனைகளை நிறுத்துங்கள், பொது இடங்களில் புகைப்பிடித்தல், மது பாவனையை செய்யாதீர்கள், பொது போக்குவரத்துக்களில் வெற்றிலை போட்டு துடுப்புதல் போன்றவற்றை நிறுத்துங்கள் என்ற அறிவிப்புகளோடு ரொஷானின் நடைபயணம் தொடர்கிறது. நடைபயணம் நடைபெறுமிடங்களை சேர்ந்தவர்கள் தன்னுடன் குறைந்தது 1 கிலோ மீட்டர் தூரமாவது நடந்து இந்த பயணத்துக்கான ஆதரவை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது நடைபயணம் தொடர்பில் இன்று மன்னாரில் எமது செய்தியாளர் ரோகினி நிஷாந்தனிடம் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழே வீடியோவாக உள்ளது.