கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் முன்னதாக அறிவித்ததன்படி எதிர்வரும் ஜூன் 6ம் திகதி விவாதத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லையென்றால், உரிய திகதிக்கு பின்னர் கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதமோ அல்லது விவாதம் தொடர்பான கலந்தரையாடல்களோ நடைபெறாது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி திட்டமிடப்பட்டபடி கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதம் இடம்பெறுமாயின் விவாதத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஏனைய விடயங்களுக்காக நேரத்தை வீண் விரயம் செய்யாமல், விவாதத்திற்கான தொலைக்காட்சி அலைவரிசை அல்லது விவாதத்தை நடத்துவதற்கான இடம் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான வேட்பாளர்களுக்கிடையில் விவாதங்கள் நடத்தப்படுவது உலக நடைமுறை எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களான தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான விவாதங்கள் எதிர்வரும் ஜூலை 27 மற்றும் செப்டம்பர் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.