இலங்கை புகையிரத சேவை பாரிய நெருக்கடியில்..!

முதலீடுகள் இன்மையினால் இலங்கை புகையிரத சேவைகள் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் புகையிரதங்கள் ரத்து செய்யப்படுகின்றமை மற்றும் புகையிரத பயணிகள் அனுபவிக்கும் தாமதங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடலோர ரயில் பாதைகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும் எனவும், இதற்காக இலங்கை எப்போதும் வெளிநாட்டு உதவிகளை பெற்றுள்ளதுடன் பயணிகள் பெட்டிகள் மற்றும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கும் வெளிநாட்டு உதவிகளை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்தியாவின் உதவியுடன் இறுதியாக ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

வடக்கு மார்க்கத்திலான ரயில் பாதை இந்திய கடன் உதவி மூலம் மேம்படுத்தப்பட்டு வருகின்றதாகவும், 20 ரயில் இன்ஜின்களை சலுகையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், நலிவடைந்துள்ள புகையிரத துறையை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டுக் கடனைப் பெறுவதற்கு நாட்டின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை இலங்கை புகையிரத சேவை பிரச்சினைகளை எதிர்நோக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

50 முதல் 60 வருடங்கள் பழமையான புகையிரதங்களுடன் சேவைகளை முன்னெடுக்கும் இலங்கை புகையிரத சேவையிலுள்ள ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன,கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், நிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்துத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version