தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பான வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (03.06) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று (31.05) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கடந்த 21 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவற்றதாக்கி, எழுத்தாணை கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.

பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வாவும், தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவும் நீதிமன்றில் முன்னிலையானர்.

அரசாங்கத்தின் தீர்மானத்தை செயற்படுத்தினால், தற்போது நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலை உருவாகும் என மனுதாரர்கள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடாமல் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமையால், அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் அடங்கலாக 52 தரப்பினர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version