டி20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் நேற்று(01.06) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் ரிஷப் பான்ட் 53 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
183 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் முகமதுல்லா 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், சிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதன்படி, இந்த போட்டியில் இந்திய அணி 60 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
உலகக் கிண்ணத்திற்கான அனைத்து பயிற்சி போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம்(02.06) 2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி அமெரிக்காவின் டலஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பபுவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேற்கிந்திய தீவுகளின் கயானா மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.