
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடரின் முதற் போட்டியில் இந்தியா அணி 285 ஓட்டங்களினால் அபார வெற்றியை பெற்றுள்ளது. நான்காம் நாளான இன்றைய தினம் 534 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் 3 விக்கெட் இழப்பிற்கு 13 ஓட்டங்கள் என்ற நிலையில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி 238 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும் இழந்தது. இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சு இந்தப் போட்டியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணம். அத்தோடு இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் வெற்றிக்கு மேலும் கைகொடுத்தது.
அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் டிரவிஸ் ஹெட் 89 ஓட்டங்களையும், மிச்செல் மார்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர். அலெக்ஸ் ஹேரி 36 ஓட்டங்கள். இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். வொசிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இரண்டாம் இன்னிங்சில் இந்தியா அணி மிகவும் சிறப்பாக துடுப்பாடி 6 விக்கெட் இழப்பிற்கு 487 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்தியது. இரண்டாம் இன்னிங்சில் நல்ல ஆரம்பத்தை லோகேஷ் ராகுல், ஜஷாஸ்வி ஜய்ஷ்வால் பெற்றனர். 201 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்ற வேளையில் லோகேஷ் ராகுல் 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடிய ஜஷாஸ்வி ஜய்ஷ்வால் 177 ஓட்டங்களை பெற்று இந்தியா அணிக்கு பலமான நிலையை உருவாக்கினார். இது அவரின் நான்காவது டெஸ்ட் சதம். விராத் கோலி 100 ஓட்டங்களை பூர்த்தி செய்த இந்திய அணிக்கு வெற்றி இலக்கை உறுதி செய்தார். அவரின் சதத்தோடு இந்தியா அணி துடுப்பாட்டத்தை நிறுத்தியது. இது கோலியின் 30 ஆவது டெஸ்ட் சதமாகும். கடந்த வருடம் ஜூன் மாதத்தின் பின்னர் டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்துள்ளார். வொசிங்டன் சுந்தர் 29 ஓட்டங்களையும், நித்திஷ்குமார் ரெட்டி ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும்பெற்றனர்.
அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. மிற்செல் ஸ்டார்க் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இறுதியாக ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை கைப்பற்ற இந்தியா அணி பெரிதும் போராட வேண்டிய நிலை ஏற்பட்து. அலெக்ஸ் கேரி 21 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 11 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்ளையும், அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்தப் போட்டியின் முதல் நாள் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த நாள். ஒரே நாளில் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதல் இன்னிங்சில் இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலியா அணி ஆக்ரோஷம் காட்டுகிறது என எதிர்பார்க்க முதல் நாள் நிறைவில் அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்ளை இழந்து மேலும் அதிர்ச்சியளித்தது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தனது முதற் போட்டியில் களமிறங்கிய நிதிஸ்குமார் ரெட்டி 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரிஷாப் பான்ட் 37 ஓட்டங்கள். லோகேஷ் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். அவர் 26 ஓட்டங்கள். அவுஸ்திரேலயா அணியின் பந்துவீச்சில் ஜோஷ் ஹெசல்வூட் 4 விக்கெட்களையும், மிற்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், மிச்செல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
ரோஹித் ஷர்மா விளையாடாத நிலையில் ஜஸ்பிரிட் பும்ரா இந்தியா அணிக்கு தலைமை தாங்கி அணிக்கு வெற்றியினை பெற்றுக்கொடுத்துள்ளார்.