தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக 

இந்திய மக்களவைத் தேர்தலில் தென் மாநிலமான தமிழகத்தில் மொத்தமாகவுள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின்(திமுக) தலைமையிலான கூட்டணியே வென்றுள்ளது. 

மொத்தமாக 40 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் இம்முறை திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி, பாஜக தலைமையிலான மற்றுமொரு அணி, தனித்துப் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முக்கிய கட்சிகள் போட்டியிட்டிருந்தன. இந்நிலையில், பிற கட்சிகளுக்கு எவ்வித வாய்ப்பினையும் வழங்காமல் திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 

கடந்த காலங்களிலிருந்தே தமிழகத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள பாஜக முயற்சித்து வருகின்ற நிலையில், இம்முறையும் தமிழகத்தில் பாஜகவின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இருப்பினும், இம்முறை பாஜக பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளது. தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை பின்தள்ளி பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தமிழக மாநிலத்திற்கான தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியுற்றுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என பகல் கனவு கண்ட தமிழிசை போன்ற ஊர்க்குருவிகளுக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி இருப்பதாகவும் மக்கள் விரோத பாசிச பாஜக தமிழ் மண்ணில் வேரறுக்கப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றித் தொடர்பில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “பாஜகவின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகவும் அமைந்திருக்கின்றது” என மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். 

இதேவேளை, தேர்தல் முடிவுகள் தொடர்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து வெளியிடுகையில், “இந்தியாவைக் காக்கும் போரில், திமுகவுடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியது” என தெரிவித்துள்ளார். 

இந்திய மக்களவைத் தேர்தலின் முழு விபரங்கள்,

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version