டி20 உலகக் கிண்ணத் தொடரில் நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், பார்படோஸில் இன்று(07.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமிபியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, நமிபியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நமிபியா அணி சார்பில் அணித் தலைவர் எராஸ்மஸ் 52 ஓட்டங்களையும், சேன் கிரீன் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஸ்கொட்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் பிராட் வீல் 3 விக்கெட்டுக்களையும், பிராட்லி கியூரி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
156 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் ரிச்சி பெரிங்டன் 47 ஓட்டங்களையும், மைக்கேல் லீஸ்க் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நமிபியா அணி சார்பில் பந்து வீச்சில் அணித் தலைவர் எராஸ்மஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்படி, இந்த போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்கொட்லாந்து அணியின் மைக்கேல் லீஸ்க் தெரிவு செய்யப்பட்டார். ஸ்கொட்லாந்து அணி நமிபியா அணிக்கு எதிராக டி20 போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட முதல் வெற்றி இதுவாகும்.