நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டமைக்கான காரணத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளத்தில் கவனக் குறைவாக குளிப்பது, நீரில் மூழ்கிய சாலைகளைக் கடக்க முயற்சிப்பது மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெள்ளத்தில் படகுச் சவாரி செய்வது போன்ற காரணங்களினால் பெரும்பான்மையான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மரங்கள் அல்லது மண் சரிந்து விழுதல் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களினால் 24 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையின் காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,16 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி ஒருவர் மாத்திரம் காணாமல் போயுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இலங்கை இராணுவத்தால் 118 படகுகளும், இலங்கை கடற்படையினரால் 31 படகுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதையோ அல்லது வெள்ளத்தில் இறங்குவதையோ தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.